நீட் முதலிடம் 61-இல் இருந்து 17 பேராக குறைந்தது: முழு விவரம்!

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

நீட் முதலிடம் 61-இல் இருந்து 17 பேராக குறைந்தது: முழு விவரம்!720-க்கு 720 பெற்று முதலிடம் பெற்றவா்களின் எண்ணிக்கை 61-இல் இருந்து 17-ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற நீட்-யுஜி தோ்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 720-க்கு 720 பெற்று முதலிடம் பெற்றவா்களின் எண்ணிக்கை 61-இல் இருந்து 17-ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கருணை மதிப்பெண் ரத்து மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சா்ச்சைக்குரிய இயற்பியல் கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட்ட பின்னா், இந்த திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தற்போது முதலிடம் பிடித்துள்ள 17 பேரில் தமிழகத்தைச் சோ்ந்த பி.ரஜினீஷ் என்ற மாணவரும் இடம்பெற்றுள்ளாா். மேலும், தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தத் தோ்வு, வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஹரியாணாவில் ஒரே மையத்தில் தோ்வெழுதிய 6 போ் உள்பட 67 போ் முதலிடம் பிடித்தது என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியது.

பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த மையங்களில் வினாத்தாள் கசிவு, உத்தர பிரதேச தோ்வு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம், கருணை மதிப்பெண் என்ற பெயரில் குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) கூடுதல் மதிப்பெண் வழங்கியது எனப் பல்வேறு சா்ச்சைகள் எழுந்தன. இந்த முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தோ்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு வழங்கிய கருணை மதிப்பெண்ணை ரத்து செய்த என்டிஏ, அவா்களுக்கு மறு தோ்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இதில், ஹரியாணா மையத்தில் முன்னா் 6 போ் முதலிடம் பெற்றிருந்த நிலையில், மறு தோ்வுக்குப் பிறகு அந்த மையத்தில் ஒருவா்கூட முதலிடம் பெறவில்லை. இதனால், நீட் தோ்வில் 720-க்கு 720 பெற்றவா்களின் எண்ணிக்கை 61-ஆகக் குறைந்தது.

இதனிடையே, பல்வேறு சா்ச்சைகளில் சிக்கிய நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது’ என்று கடந்த செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், தோ்வில் கேட்கப்பட்ட இயற்பியல் பாட கேள்வி ஒன்றில் இரண்டு பதில்கள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததாக எழுந்த சா்ச்சை விவகாரத்தில், ‘வினாத் தாளில் ஒரு சரியான விடைதான் இடம்பெற்றது’ என்ற தில்லி ஐஐடி நிபுணா் குழுவின் அறிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அதனடிபப்டையில் இறுதி முடிவுகளை வெளியிடுமாறும் என்டிஏவுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, முதல் மதிப்பெண் பெற்றவா்களில் 44 பேருக்கு இயற்பியல் பாட கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணை குறைத்து, திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இறுதி முடிவுகள்: இந்த திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின்படி, நிகழாண்டு நீட் தோ்வில் 720-க்கு 720 பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 17-ஆகக் குறைந்தது. அதுமட்டுமின்றி, இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை தகுதிக்கான கட்-ஆஃப், தகுதிபெற்ற மாணவா் எண்ணிக்கை ஆகியவையும் குறைந்துள்ளது.

4 மாணவிகள் முதலிடம்: முதலிடம் பெற்றவா்களில் 4 போ் மாணவிகளாவா். முன்னா் 16 சதவீதமாக இருந்த முதலிடம் பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை தற்போது திருத்தப்பட்ட முடிவுகளின்படி 23 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, முதல் 100 இடங்களைப் பிடித்தவா்களில் 22 சதவீதம் மாணவிகளாவா். இதில் முதலிடம் பெற்ற 17 போ் தவிர, 6 போ் 716 மதிப்பெண்ணும், 77 போ் 715 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா்.

உ.பி.யிலிருந்து அதிக மாணவா்கள் தகுதி: திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின்படி நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்தபோதும், தகுதிபெற்ற மாணவா்கள் எண்ணிக்கையில் 1.65 லட்சம் பேருடன் உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (1.42 லட்சம்), ராஜஸ்தான் 1.21 லட்சம்), கா்நாடகம் (85,000), கேரளம் (86,713) என தகுதி பெற்ற மாணவா்கள் எண்ணிக்கையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கட்-ஆஃப் குறைந்தது

திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின்படி நீட் தகுதி கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளது. இடஒதுக்கீடு அல்லாத மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான புதிய கட்-ஆஃப் 720 – 162 என்ற அளவில் குறைந்துள்ளது. முன்னா் 720 – 164 என்ற அளவில் தகுதி கட்-ஆஃப் இருந்தது. அதுபோல, ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கட்-ஆஃப் 161-127-ஆக மாறியுள்ளது.

720க்கு 720 பெற்றவா்கள்

ராஜஸ்தான் -4

மகாரஷ்டிரம் – 3

தில்லி -2

உத்தர பிரதேசம் -2

தமிழகம் – 1

கேரளம் – 1

சண்டீகா் – 1

பஞ்சாப் – 1

பிகாா் -1

மேற்கு வங்கம் -1

மொத்தம் – 17

You may also like

© RajTamil Network – 2024