Monday, September 23, 2024

நீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் புகுந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீட் தேர்வில் 0.001 சதவீத அளவிற்கு அலட்சியம் கண்டறியப்பட்டாலும் அதை மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.

இதனிடையே நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீட் முறைகேடு விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் புகுந்தனர். நீட் தேர்வு உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் மற்ற தேர்வுகளிலும் முறைகேடு நடப்பதாக கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தேசிய தேர்வு முகமை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024