Friday, September 20, 2024

நீர்மட்டம் குறைவு எதிரொலி: மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு இல்லை

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

16 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை வழங்கி வருகிறது.

மேட்டூர்,

மேட்டூர் அணை நீர்மட்டம் 43.71 அடியாக குறைந்துள்ளதால் அணையில் இருந்து இன்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தொடர்ந்து திறக்கப்படும்.

இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகத்துக்கும் சேர்த்து சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை வழங்கி வருகிறது. பருவமழை தவறிய நிலையில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீரும் முழுமையாக கிடைக்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது

அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் எனில் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டி இருக்க வேண்டும் என்பதுடன், அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து நன்றாக இருக்கும் என்ற சூழல் நிலவினால் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 43.71 அடியாக குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முழுமையாக தொடங்கவில்லை.

இதனால் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் நீர்வரத்தும் வினாடிக்கு 500 கனஅடிக்கு கீழே இருந்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கனஅடியாக குறைந்தது.

அணை கட்டப்பட்டு 91 ஆண்டு கால வரலாற்றில் ஜூன் மாதம் 12-ந்தேதி திட்டமிட்டப்படி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையானது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை (2011-ம் ஆண்டு தவிர) தொடர்ந்து 9 ஆண்டுகள் கால தாமதமாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகள் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பருவமழை தீவிரமடையாவிட்டால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வியை தாண்டி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024