Sunday, October 20, 2024

நெல்லையப்பர் கோவில் தேர் வடம் அடுத்தடுத்து அறுந்தது ஏன்? – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

நெல்லையப்பர் கோவில் தேர் வடம் அடுத்தடுத்து அறுந்தது ஏன்? என்பது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.

சென்னை,

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழக்கம் போல இந்த ஆண்டும் கயிறால் திரிக்கப்பட்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக தேர் வடங்கள் அடுத்தடுத்து அறுந்தன. இதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து மாற்று வடம் கொண்டுவந்து கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் இரண்டாவதாக கட்டப்பட்ட வடமும் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 450 டன் எடை கொண்ட தேர் வடங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அறுந்ததால் தேரை இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கயிறால் திரிக்கப்பட்ட வடங்களுக்கு பதில் இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு தேரை இழுக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் நெல்லையப்பர் கோவில் தேர் வடம் அடுத்தடுத்து அறுந்தது ஏன்? என்பது தொடர்பாக தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் நெல்லையப்பர் கோவில் தேர் ஆகும். 28 அடி அகலமும், 28 அடி நீளமும், 70 அடி உயரமும் கொண்ட அந்த தேரானது நேற்று பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேருக்கு பின்னால் இருந்து நெம்புகோல் தருவதற்கு முன்பாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒட்டுமொத்தமாக இழுத்ததன் காரணமாக தேரின் வடம் அறுந்தது.

அதற்கு மாற்றாக திருச்செந்தூரில் தயாராக வைக்கப்பட்டிருந்த தேர் வடம் கொண்டு வரப்பட்டு, நெல்லையப்பர் தேரில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் வெற்றிகரமாக 5 சுவாமிகளும் ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு நிலையை அடைந்தனர்.

எல்லா தேர்களுக்கும் தேரின் இணைப்பு பகுதியில் இரும்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் கோவில் தேர் 450 டன் எடை கொண்டது. அதிக எடை கொண்ட தேர்களுக்கு கயிற்றினால்தான் வடம் பின்னப்படுகின்றது. தேருக்கும், வடத்திற்கும் தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சான்று அளித்த பின்னர்தான் தேர் வீதி உலாவிற்கு எடுத்து வரப்பட்டது."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024