நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறப்பு: கனிமொழி எம்.பி. தகவல்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறப்பு: கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கீழவல்ல நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளிக்கு கடந்த மாதம் சென்ற கனிமொழி எம்.பி., அங்கு மாணவ – மாணவியரைச் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், “இதுவரை நாங்கள் எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. தொல்லியல், பண்பாடு சார்ந்த இடத்துக்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று கனிமொழி எம்பி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இன்று மாவட்ட மாதிரி பள்ளிக்குச் சென்றகனிமொழி, 4 பேருந்துகளில் 200 மாணவ – மாணவியரை அழைத்துக் கொண்டு ஆதிச்சநல்லூர் சென்றார். அப்போது அவரும் மாணவியருடன் பேருந்தில் அமர்ந்து பேசியபடி பயணித்தார். தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் ‘பி’ சைட்டில் உள்ள மியூசியம், ‘சி’ சைட்டியில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மாணவ – மாணவியருடன் சேர்ந்து பார்வையிட்டார் கனிமொழி.

அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம் குறித்து திருச்சி மண்டல மத்திய தொல்லியல் ஆய்வாளர் முத்துகுமார், சைட் மேற்பார்வையாளர் சங்கர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தங்களை ஆதிச்சநல்லூர் அழைத்து வந்த கனிமொழிக்கு மாணவ – மாணவியர் நன்றி தெரிவித்தனர்.

கனிமொழி எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பள்ளி கல்லூரி மாணவ – மாணவியர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே, அரசு மாதிரி பள்ளி மாணவ – மாணவியரை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்துள்ளோம். இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் மாணவ – மாணவியர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண வரவேண்டும். உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் தொடங்கும் பணி சிறிது காலம் தாமதப்பட்டது. தற்போது இந்த பணியை தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் மாநில தொல்லியல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில் மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து எடுத்த பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்படும்” என்று கூறினார்.

இந்தப் பயணத்தில் கனிமொழியுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வட்டாட்சியர் சிவகுமார், டிஎஸ்பி-யான ராமகிருஷ்ணன், வல்லநாடு அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, கே.ஜி.எஸ் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், முனைவர் கந்தசுப்பு, ஆதிச்சநல்லூர் ஊராட்சி தலைவர் பார்வதி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024