நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – மணிஷ் சிசோடியா

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இருந்து கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மணீஷ் சிசோடியா கூறியதாவது,

"கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரிய நிவாரணம்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் மட்டுமல்ல, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகாரத்தை நிறுத்திக்கொள்ள கோர்ட்டு ஒரு பெரிய செய்தியையும் இதன் மூலம் கொடுத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, யாரேனும் "சர்வாதிகாரத்தை" நாடினால், சுப்ரீம் கோர்ட்டு அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

கெஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க பாஜக நினைத்தது, எனவே அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு சிபிஐ அவரை கைது செய்தது. பாஜகவின் நோக்கத்தை சிபிஐ நிறைவேற்றியது. கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவு பாஜக முகத்தில் ஒரு பெரிய அறை. மேலும் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் பாஜகவின் பொய் மலை இப்போது சரிந்துவிட்டது என்பதற்கு ஒரு சான்றாகும். கெஜ்ரிவால் போன்ற உறுதியான நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

அரியானா மற்றும் டெல்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவை தோற்கடிக்கும். கெஜ்ரிவாலின் இருப்பு எங்களை பலப்படுத்தும் என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024