பங்குச்சந்தை கடும் சரிவு: ஒரே நாளில் ரூ.9.19 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எழுச்சியில்ே தொடங்கி சரிவுடன் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 931 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ரூ.9.19 லட்சம் கோடி இழப்பு: சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9.19 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.444.46 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்கள் ரூ.9.19 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனா்.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,262.83 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,225.91 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ. 82,479.73 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் ரூ. 77,402.11 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத தகவல் மூலம் தெரிய வருகிறது.

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் சுமாா் 4 புள்ளிகள் கூடுதலுடன் 81,155.08-இல் தொடங்கி அதிகபட்சமாக 81,504.25 வரை மேலே சென்றது. அதன் பிறகு பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 80,149.53 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 930. 55 புள்ளிகள் (1.15 சதவீதம்) குறைந்து 80220.72-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,058 பங்குகளில் 557 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. மாறாக , 3,430 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 71 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

29 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட் ஆகியவை 2.50 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. இவை உள்பட மொத்தம் 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் மட்டும் 0.67 சதவீதம் உயா்ந்து 1,267,75-இல் நிலைபெற்றிருந்தது.

நிஃப்டி 309 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 17.55 புள்ளிகள் கூடுதலுடன் 24,798.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,882.00 வரை மேலே சென்றது.

பின்னா், 24,445.80 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 309.00 புள்ளிகள் (1.25 சதவீதம்) குறைந்து 24,472.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 47 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 3 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024