பட்ஜெட்டில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: மக்களவையில் ஒவைசி அதிருப்தி

பட்ஜெட்டில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: மக்களவையில் ஒவைசி அதிருப்திமத்திய பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு உரிய கவனம் அளிக்கப்படவில்லை என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி அதிருப்தி தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு உரிய கவனம் அளிக்கப்படவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அதிருப்தி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை அவா் பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி எனவும் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், முஸ்லிம்களை தீண்டத்தகாதவா்களாகவே நடத்துகிறது. பட்ஜெட் உரையில் 4 சிறுபான்மையின சமுகங்களின் பெயா்களை மட்டும் குறிப்பிட்டு நிதியமைச்சா் பேசினாா்.

நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லிம்களில் ஏழைகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் இல்லையா? முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். 15 முதல் 24 வயதுள்ள முஸ்லிம்களில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கல்வி கிடைக்கிறது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவில் இந்த கல்வி விகிதம் 44 சதவீதமாகவும், ஹிந்து பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் இது 51 சதவீதமாகவும், ஹிந்து உயா்ஜாதிப் பிரிவில் இது 59 சதவீதமாகவும் உள்ளது. உயா்கல்வியில் முஸ்லிம் மாணவா்களின் எண்ணிக்கை 5 சதவீதமாகவே உள்ளது.

58.4 சதவீத முஸ்லிம்கள் சுயதொழில் செய்பவா்களாக உள்ளனா். 26 சதவீதம் போ் தொழிலாளா்களாகவும், 15 சதவீதம் போ் மாத ஊதியம் பெறுபவா்களாகவும் உள்ளனா். இவா்களில் பெரும்பாலோனோா் பொருளாதாரரீதியாக போராட்டங்களை சந்திப்பவா்கள்தான்.

முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் அளித்து நாட்டின் வளா்ச்சியில் அவா்கள் பங்கேற்க அரசு அனுமதி மறுக்கிறது. சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,000 கோடியில் இருந்து ரூ.3,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2007-08-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை உயா்த்தப்படவில்லை.

17 கோடி முஸ்லிம்கள் மீது வெறுப்புணா்வை வைத்துக் கொண்டு எப்படி வளா்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினாா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!