Monday, September 30, 2024

பட்டியலினத்தவர் ‘முதல்வர்’ ஆக முடியாது என்று நான் சொன்னது தேசிய பார்வை: திருமாவளவன் விளக்கம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பட்டியலினத்தவர் ‘முதல்வர்’ ஆக முடியாது என்று நான் சொன்னது தேசிய பார்வை: திருமாவளவன் விளக்கம்

சென்னை: “பட்டியலினத்தவர் முதல்வராக முடியாது என்பது தேசிய பார்வையில் சொல்லப்பட்டது,” என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை, அண்ணாசாலையில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வுக்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “விசிகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத கும்பல் சமூக ஊடகங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இல்லாத அவதூறுகளை பரப்புகின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இதை எப்படியாவது சிதறடிக்க வேண்டும் என கருதக் கூடியவர்கள் பல வகையிலும் திமுகவையும், விசிகவையும் குறிவைத்து பேசி வருகின்றனர். எனவே, நாம் எச்சரிக்கையாக பொறுப்புணர்வுடனும், தொலைநோக்கு பார்வையோடும் பயணிக்க வேண்டும்.

விசிக சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை என்றாலும் சமூகத்தில் நிலவும் யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் வகையில் எந்த சூழலிலும்பட்டியலினத்தவர் முதல்வராக முடியாது என்று நான் சொன்னேன். அது ஒரு தேசிய பார்வையில் சொல்லப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் கிளம்பியுள்ளது. திமுகவை மனதில் வைத்து நான் பேசியதாக கூறுகின்றனர். இதற்கெல்லாம் நாம் எதிர்வினையாற்ற வேண்டிய தேவையில்லை. பொருட்படுத்த தேவையில்லை. சோளிங்கர் அருகே பெருங்காஞ்சி என்ற கிராமத்தில் சாதிய கொலை நடந்திருக்கிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தமிழர் எழுச்சி நாளையொட்டி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகளை அனுமதியின்றி வைத்ததாக கூறி போலீஸார் அவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர். கொடிக்கம்பங்களை அகற்றியுள்ளனர். நாகப்பட்டினம் அருகே விசிகவின் கொடிக்கம்பத்தை தாசில்தார் வந்து பிடுங்கி எறிந்திருக்கிறார். அதிகாரிகளுக்கு எவ்வளவோ வேலையிருக்கின்றன. ஆனால் விசிகவின் கொடியை அகற்றுவது கடமை என பலர் ஆங்காங்கே செயல்படுவது தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. விசிகவிடம் மட்டுமே அதிகாரிகள் விதிகளை பேசுகின்றனர்.

கொடியேற்றுவதில் வருவாய்த்துறையினருக்கு எப்போது அதிகாரம் வழங்கப்பட்டது என தெரியவில்லை. விசிகவின் நடவடிக்கையில் அடிக்கடி வருவாய்த்துறையினர் தலையிட்டு கொடிக்கம்பங்களை அறுப்பது போன்றவற்றை செய்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். இதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் கூட்டணியின் நலன் கருதி, தேச நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டிய தேவை கருதி செயல்படுகிறோம்.

அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு எப்போதும் போல் தொல்லை தருகிறார்கள். அரசின் அறிவுறுத்தலின்றி, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதை சுட்டிக்காட்டுவோம். நாணய வெளியீட்டு விழாவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளை தாண்டிய நட்புறவு அரசியல் கட்சிகளுக்கு இடையே இருப்பது நல்லது. மேலும், பாஜக இப்போது இறங்கமுகத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் திமுக தற்கொலை முயற்சியில் ஈடுபடாது,” என்று அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024