Saturday, September 28, 2024

“பட்டியலின மக்களுக்கு சமூக நீதி!” – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

“பட்டியலின மக்களுக்கு சமூக நீதி!” – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பட்டியலினத்தவருக்கு சமூக நீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியலின மக்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவருக்கு சமூக நீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கியக் காரணம் ஆகும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988-ஆம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியதுடன், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானமும் இயற்றப்பட்டது.

அப்போது தொடங்கி கடைசியாக 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களுடன் பாமக தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியைச் சந்திக்கச் செய்து, அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது வரை பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு அளப்பரியது.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என கடந்த 2020 ஆகஸ்ட் மாதமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும், பட்டியலின சமூகங்களிடையே உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 பேர் அமர்வில் நிலுவையில் இருந்ததால், அந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அருந்ததியர் இட ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அருந்ததியர் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேநேரத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்; கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் பட்டியலினத்தவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூக நீதியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. அதற்கான ஒரு நடவடிக்கைதான் உள் இடஒதுக்கீடு. அதற்கு மாறாக கிரீமிலேயர் முறை புகுத்தப்பட்டால் அது பட்டியலினத்தவருக்கு சமூக நீதியை மறுப்பதற்கான கருவியாக அமைந்து விடும். எனவே, பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை கொண்டு வரும் ஆபத்தான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 2022-ஆம் ஆண்டு வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு என மாநில அரசுகளின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்காமல் அனைத்துத் தரப்பினருக்கும் சமூக நீதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024