புதுடெல்லி,
ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாநில கோர்ட்டில் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்ற பொதுவான சட்டக் கொள்கை பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பணமோசடி சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவாக ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பணமோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் போது, விசாரணை அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டையும் சாட்சியமாக ஏற்க முடியாது. அதுமட்டும் இன்றி இந்த வழக்கில் பிரகாஷ் முதன்மையானவர் அல்ல என்றும் ஆதாரங்களை சிதைக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிரேம் பிரகாஷுக்கு ரூ.5 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.