பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க கொள்கைகளில் எந்தவித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மோடி அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நாளை (நவ. 8) தொடங்கி இரு நாள்கள் நடக்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், ”மோடி அரசு பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் கொளிகையில் எந்த சமரசமும் இன்றி இயங்கி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | ராகுல் குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தில்லி உயா்நீதிமன்றத்தில் தகவல்
இந்த மாநாடு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது:
பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்கான செயல்பாட்டுக் குழுக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சட்டம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்பினர ஒன்றிணைக்கும் புள்ளியாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாடு இருக்கிறது.
மாநாட்டின் முக்கியமாக கவனப்படுத்தப்படும் விஷயம் என்னவென்றால், 'அரசின் முழுமையான அணுகுமுறை' என்ற நிலையின் கீழ் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அமைப்புகளை நிறுவுவதன் மூலம் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒற்றுமையை வளர்த்து, எதிர்காலத்திற்கான கொள்கை உருவாக்கத்திற்கு தேவையான விஷயங்களை முன்வைப்பதாகும்.
இந்த மாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்.
இதையும் படிக்க | உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கு எளிதாக கல்விக் கடன்- பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சர்வதேச சட்டங்களின் ஒத்துழைப்பு மற்றும் இந்தியா முழுவதுமுள்ள பயங்கரவாத சூழலை உருவாக்கும் விதமான குழுக்களை அகற்றுவதற்கான உத்திகள் தொடர்பான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் அனைத்து மாநில மூத்த போலீஸ் அதிகாரிகள், மத்திய அமைப்புகளின் அதிகாரிகள்,பயங்கரவாத எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள துறைகள் மற்றும் சட்டம், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்க உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.