Wednesday, November 6, 2024

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம்: மற்றவர்களை எச்சரிக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சோகம்

by rajtamil
0 comment 40 views
A+A-
Reset

புதுடெல்லி,

காஷ்மீரில் உள்ள சிவகோரி மற்றும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பஸ்சில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். மாலை நேரத்தில் ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்தபோது, பயங்கரவாதிகள் திடீரென பஸ் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள்.

இதனால் தாறுமாறாக ஓடத் தொடங்கிய பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பக்தர்கள் பலியானார்கள். 41 பேர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் இறங்கி உள்ளது. இதற்கிடையே விபத்தில் இறந்தவர்களை பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயங்கரவாத தாக்குதல் குறித்து மற்றவர்களை துணிச்சலுடன் எழுந்து எச்சரித்த வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சோக சம்பவமும் தெரியவந்து உள்ளது.

வடகிழக்கு டெல்லியின் மண்டோலி பகுதியை சேர்ந்த சவுரவ் குப்தா (வயது 21) என்பவரும் அந்த பஸ்சில் இருந்தார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன அவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் குழந்தை வரம் வேண்டுவதற்காக வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மனைவி ஷிவானி குப்தாவுடன் சவுரவ் சென்றார்.

சுற்றுலா பஸ்சில், ஓட்டுனரின் பின்னால் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தார் சவுரவ். பயங்கரவாதிகள் தாக்குதலின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் மனைவி கண்முன்னே பலியானார். இதனால் ஷிவானி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளார்.

இந்த நிலையில் சவுரவின் மாமா மனோஜ் குப்தா, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

"சவுரவ் துணிச்சலான மனிதர். 6 அடி உயரத்தில் வலிமையான உடல் அமைப்பு கொண்டவர். பயங்கரவாதிகள் அவர்களது பஸ்சை தாக்கியபோது, அவர் மற்றவர்களை எச்சரிக்கை செய்வதற்காக இருக்கையைவிட்டு எழுந்தார். அப்போது ஜன்னல் ஓர இருக்கையில் இருந்த அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது கழுத்தின் பின்பகுதியில குண்டு பாய்ந்தது.

ஆனால் சவுரவின் மனைவி துப்பாக்கி தாக்குதலில் காயம் அடையவில்லை. இருந்தபோதிலும் பஸ் கவிழ்ந்ததில் அவருக்கு கால்கள் மற்றும் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு, ஷிவானி தனது பாட்டியிடம் வீடியோ அழைப்பில் பேசி இயற்கை அழகை காண்பித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கி சூட்டில் பலியான சவுரவின் தாயார், அவர் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தந்தையும், ஒரு சகோதரரும் உள்ளனர். சவுரவ் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024