Friday, September 20, 2024

பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் – வங்காளதேசம் முதலாவது டெஸ்ட் போட்டி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் தரப்பில் இதுவரை 4 வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக ரிஸ்வான் 171 ரன்களும், சாத் ஷகீல் 141 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மக்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை நிதானமாக ஆடிய வங்காளதேசம் ஆட்ட நேர முடிவில் 12 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் அடித்திருந்தது. ஷத்மன் இஸ்லாம் 12 ரன்னுடனும், ஜாகிர் ஹசன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் ஜாகிர் ஹசன் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாண்டோ 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இத்தகைய இக்கட்டான சூழலில் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் உடன் கை மொமினுல் ஹக் கோர்த்தார். இருவரும் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அரைசதம் அடித்த நிலையில் மொமினுல் ஹக் ஆட்டமிழந்தார் பின்னர் ஷத்மன் உடன் முஷ்பிகுர் ரஹிம் கை கோர்த்தார். இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை திறம்பட சமாளித்து அணியை முன்னேடுத்து சென்றனர்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷத்மன் இஸ்லாம் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷகிப் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் – ரஹிம் இணை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதுடன், அரைசதம் அடித்து அசத்தினர். வங்காளதேசம் தரப்பில் இதுவரை 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

3-வது நாளில் வங்காளதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் சேர்த்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷேசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

வங்காளதேசம் முன்னிலை பெற இன்னும் 132 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், பாகிஸ்தான் அதனை கட்டுப்படுத்த இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024