பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் செயல்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வருவதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை அரசுமருத்துவமனைகளிலும் சிறப்புபடுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து 27 வயது இளைஞர் ஒருவர் கோவை விமானநிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார். காய்ச்சல் மற்றும் குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்புளங்கள் அவருக்கு இருந்தன. திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனையின்போது, அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர், திருவாரூர் அருகே உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று காவல் துறையின் உதவியுடன் அவர் அழைத்து வரப்பட்டு திருச்சிஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்தது சிக்கன் பாக்ஸ் தொற்று என்பது பரிசோதனையில் உறுதியானது. ஆனாலும், மறு பரிசோதனைக்காக புனே ஆராய்ச்சி மையத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்துள்ளது. ஆனால், அனைத்துமுன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வடகிழக்கு பருவகாலம் முடியும் வரை முன்னேற்பாடு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்களை திரும்ப பெற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.