Saturday, September 21, 2024

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் வீறுபெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சி பெறும். உயர் நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே.

தமிழ்நாட்டில் தற்போது ஐந்து பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கான துணை வேந்தர்கள் பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. தேடுதல் குழுவில் பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி நியமிப்பது தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால், துணை வேந்தர்கள் நியமனம் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் உயிர் நாடியாக விளங்குபவர் துணை வேந்தர் தான். துணை வேந்தர் இல்லாத பல்கலைக்கழகம் தலையில்லாத பல்கலைக்கழகம் என்பதோடு, இது பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்தையும், கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறுவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என அறிகிறேன்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைந்து முடிக்கவும்; மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு மேதகு ஆளுநருடன் கலந்து பேசி தற்போது காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்பவும் முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024