பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் வாக்குமூலம் அளித்தாரா? – உ.பி. போலீசை வறுத்தெடுத்த நீதிபதிகள்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் ஷப்த் பிரகாஷ் என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து 2014-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி அதே நபரின் பெயரை சாட்சியமாக குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஷப்த் பிரகாஷிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த வழக்கில் புகார்தாரராகவும், முக்கிய சாட்சியாகவும் இருக்கும் ஷப்த் பிரகாஷ் என்பவர், கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதியே உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் அவரது மனைவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஷப்த் பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட புருஷோத்தம் சிங்கிற்கு எதிரான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், "பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபர் போலீசில் புகார் அளித்தது மட்டுமின்றி, தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது வினோதமாக இருக்கிறது. இந்த வழக்கில் அனைத்து சட்ட நடவடிக்கைகளிலும் ஒரு பேய் சம்பந்தப்பட்டிருப்பது போல தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய விசாரணை அதிகாரியின் நடத்தை குறித்து குஷிநகர் எஸ்.பி. விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024