பல தடைகளை உடைத்து ஒலிம்பிக்கில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வினேஷ் போகத்.. யார் இந்த சிங்கப்பெண்?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை யார் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ராவும், மல்யுத்தத்தில் வினேஸ் போகத்தும் தங்கத்தை வேட்டையாட தயாராகவுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் இந்தியாவிற்கு இன்னும் தங்கம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை போக்குவதற்கு தங்க மகன் நீரஜ் சோப்ர ஒருபுறம் களமாடிக்கொண்டிருக்க, மல்யுத்தத்தில் ஒரே நாளில் தங்கத்திற்கு மிக அருகில் நெருங்கி தேசத்தின் பெருமையை உலகறியச்செய்துள்ளார் சிங்கப்பெண் வினேஷ் போகத்.
விளம்பரம்
பாலிவுட் திரைப்படம் தங்கல் படத்திற்கும் வினேஷ் போகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளான கீதா, பபிதாவின் உண்மை கதைதான் தங்கல் படம். அப்பட நாயகிகளின் நெருங்கிய உறவினர் தான் வினேஷ் போகத், இவரது தந்தை ராஜ்பால் போகத்தும் மல்யுத்த வீரர், இவரதுகணவர் சோம்வீர் ராதேவும் மல்யுத்த தேசிய சாம்பியன்தான்.
ஆக மொத்தத்தில் வினேஷ் குடும்பமே மல்யுத்த குடும்பமாக இருக்கிறது. 29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலியே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து தொடர்களில் பதக்கங்களை வென்று, தனது இல்லத்தையே பதக்கங்களால் அலங்கரித்தார்.
விளம்பரம்
சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றாலும் வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 2016- ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் தோல்வி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டில் காலிறுதியில் தோல்வி என ஒலிம்பிக் களம் மட்டும் வசமாகாமலே இருந்தது.
இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார். ஜப்பான் தவிர்த்து மற்ற நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளுடன் சுசாகி 82 முறை விளையாடியதில், ஒன்றில்கூட தோற்றதில்லை . அந்த சாதனைக்கு முடிவு கட்டியுள்ளார் வினேஷ்.
விளம்பரம்இதையும் படிங்க | பாரிஸ் ஒலிம்பிக் 2024 : ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் முதலிடம்… பதக்கத்தை நெருங்கும் தங்க மகன் நீரஜ் சோப்ரா..
காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ், தங்கப்பதக்கத்தை முத்தமிட காத்திருக்கிறார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை உயரே பறக்கவைக்க காத்திருக்கும் இந்த வீராங்கனையை தான் கடந்த ஆண்டு டெல்லியில் போராட்டத்தின் போது காவல்துறை நடு ரோடு என்றும் கூட பார்க்காமல் இழுத்துச்சென்றது. அத்தனை தடைகளையும் உடைத்து தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் சிங்கப்பெண்ணான வினேஷ் போகத்.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Olympic 2024
,
Parils Olympic 2024