Tuesday, September 24, 2024

பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை அதிரடி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

அரசு பள்ளிகளில் வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் சொற்பொழிவு உட்பட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி வளாகத்திற்குள், இனி அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும், மீறினால், பள்ளி தலைமை ஆசிரியருடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்றும், இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024