Friday, September 20, 2024

பழனியில் ஆகஸ்ட் 24,25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

by rajtamil
0 comment 68 views
A+A-
Reset

பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருகபக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருகபக்தர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கும், முருகப்பெருமானை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வருகின்ற 15.07.2024 தேதிக்குள்ளும் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் 20.06.2024 தேதிக்குள்ளும் மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024