Sunday, September 22, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங் பாபர் அசாம்தான் – ஹசன் அலி புகழாரம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங் என்று ஹசன் அலி பாராட்டியுள்ளார்.

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்களை எடுக்காமல் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார். அந்த சூழ்நிலையில் பாபர் அசாம் பாகிஸ்தானின் கிங் என்று சமீபத்தில் பாராட்டிய சக வீரர் ஹசன் அலி தம்முடைய கேப்டனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக தம்மை பலரும் கடுமையாக திட்டியதாக ஹசன் அலி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் பாபர் அசாம்தான் பாகிஸ்தானின் கிங் என்று அவர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ஜோ ரூட் மட்டுமே இடம் வகித்த பேப் 4 வீரர்களை பாபர் அசாம் 5 வீரர்கள் கொண்ட பட்டியலாக மாற்றியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "கிங் (பாபர் அசாம்) இதை செய்வார் என்று சொன்ன நாளிலிருந்து எனக்கு அதிகப்படியான விமர்சனங்கள் வருவதை நான் கவனித்தேன். பாபர் அசாம் என்னுடைய கிங். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங். அவர் எப்போதும் கிங்-காக இருப்பார். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமான பேட்ஸ்மேன். இதற்காக மீண்டும் என்னை பலரும் திட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

கேப்டனாக இதுவரை அவர் பெரிய வெற்றிகளை பெற்றதில்லை. ஆனாலும் அவர் சிறந்தவர். அவர் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையின் கிங். இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பையில் மட்டுமே அவர் சதமடிக்கவில்லை. மற்றபடி அனைத்து இடங்களிலும் அவர் அசத்தியுள்ளார். நீங்கள் பேப் 4 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் தற்போது பாபர் அசாம் காரணமாக அது பேப் 5-ஆக மாறியுள்ளது. எனது கருத்தில் இப்போதும் நான் மாறாமல் இருக்கிறேன்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024