Friday, September 20, 2024

பாதாள சாக்கடையில் உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: ஆவடி எம்எல்ஏ நாசர் வழங்கினார்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பாதாள சாக்கடையில் உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: ஆவடி எம்எல்ஏ நாசர் வழங்கினார்

ஆவடி: பாதாளச் சாக்கடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர், இழப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை நேற்று வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி (25). இவர், ஆவடி மாநகராட்சியில் பாதாளச்சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் ஆவடி, ஜெ.பி.எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட கோபி திடீரென மயங்கி பாதாளச் சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து, ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவன மேலாளர் ரவி(52), மேற்பார்வையாளர் ஆனந்த்பாபு (30) ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், ஒப்பந்த நிறுவனம் சார்பில் அளிக்க வேண்டிய, உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் கோபிகுடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை, ஒப்பந்ததாரருக்கு ஆவடி மாநகராட்சி அளிக்க வேண்டிய நிதியில் இருந்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கோபி மனைவி தீபாவிடம் ரூ. 30 லட்சம்இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, மாநகர பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் முகைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

© RajTamil Network – 2024