பாபர் அசாம் விராட் கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – பாக்.முன்னாள் வீரர் அதிரடி

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பாகிஸ்தான் வீரர்கள் பேசுவதை விட செயலில் காட்டினால் நல்லது என்று யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் பேசுவதை விட செயலில் காட்டினால் நல்லது என்று அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பாபர் அசாம் உள்ளிட்ட மற்ற வீரர்கள் களத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் நமக்கு தேவையான முடிவுகள் கிடைத்திருக்கும். ஆனால் நான் கவனித்ததை வைத்து பார்க்கும்போது நமது வீரர்கள் செயல்படுவதை விட பேசுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் வாய் மட்டும்தான் செயல்படுகிறது.

ஆனால் விராட் கோலியை பாருங்கள். யாரும் சொல்வதற்கு முன்பாகவே தானே கேப்டன் பதவியை விட்டு விலகி தற்போது உலகம் முழுவதும் பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். இதன் மூலம் நாட்டுக்காக விளையாடுவதுதான் முதன்மையான விஷயம் என்பதை விராட் கோலி வெளி காட்டுகிறார். முதலில் நாட்டுக்காக விளையாடிவிட்டு பின் வேண்டுமானால் சக்தி இருந்தால் உங்களுக்காக விளையாடிக் கொள்ளுங்கள்.

என்னுடைய அறிவுரை எல்லாம் பாபர் அசாம் கிரிக்கெட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய செயல்பாட்டை அவர் அதிகப்படுத்த வேண்டும். அணியிலே சிறந்த வீரர் என்ற முறையில் தான் பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு வந்தார். பாபர் அசாம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே அவர் கிரிக்கெட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ரன்கள் குவிக்க வேண்டும்.

சமூக வலைதளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். சமூக வலைத்தளத்தில் யாருக்கும் பதில் சொல்லாதீர்கள். உங்களுடைய செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லுங்கள். உங்களுடைய உடல் தகுதியை நீங்கள் மேம்படுத்துங்கள். போட்டிக்காக தயாராகும் விதத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வாய்ப்பு என்பது அடிக்கடி உங்கள் கதவை தட்டாது" என்று கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024