‘பாரத் டோஜோ யாத்திரை ஏழைகளை கேலி செய்வதாகாதா?’ – மாயாவதி கேள்வி

லக்னோ,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை(ஜோடோ யாத்ரா) நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின்போது சிறுவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி தற்காப்பு கலை பயிற்சிகளில் ஈடுபட்டது தொடர்பானகாட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், 'பாரத் ஜோடோ' யாத்திரை போல், விரைவில் 'பாரத் டோஜோ' யாத்திரை தொடங்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். 'டோஜோ' என்பது தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சி கூடம் அல்லது பள்ளியைக் குறிக்கும் சொல்லாகும்.

இந்த நிலையில், பாரத் டோஜோ யாத்திரை என்பது ஏழைகளை கேலி செய்வதாகாதா? என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பசியை அறியாதவர்களுக்கான 'டோஜோ' மற்றும் பிற விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால் வறுமை, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பின்தங்கிய நிலையில் போராடும் கோடிக்கணக்கான குடும்பங்கள், இரவு பகலாக உழைத்து உணவு தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 'பாரத் டோஜோ யாத்திரை' இவர்களை கேலி செய்வதாகாதா?

மத்திய, மாநில அரசுகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய உழைக்கும் மக்களை வெறும் வயிற்றில் பஜனை பாட வைக்க நினைக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரசும் மக்கள் விரோத போக்கை கொண்டிருப்பதை பொதுமக்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

காங்கிரஸ் கட்சியும், அதன் 'இந்தியா' கூட்டணியும் இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டம் என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வாக்குகளைப் பெற்று பலத்தை அதிகப்படுத்திக் கொண்டாலும், மக்களின் பசி, வேதனையை மறந்து, காலம் முடிந்தவுடன் அவர்களிடம் இந்தக் கொடுமையான அணுகுமுறையை காட்டுவது சரியா? விளையாட்டை அரசியலாக்குவது தீங்கு விளைவிக்கும். அதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது."

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

Skoda Teases Elroq Electric SUV; Set For Global Debut On October 1

கெத்து தினேஷ்..! பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடிகர் தினேஷ்!