Sunday, September 29, 2024

பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம் – நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி ஆரோக்கியசாமி கேட்டுள்ளார்.

விழுப்புரம்,

பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காத ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி செலுத்தினார். பின்னர் மறுநாள் 28.11.2022 அன்று ஆர்டர் கொடுத்தப்படி 25 பார்சல் சாப்பாட்டை ஆரோக்கியசாமி வாங்கினார். அதற்கு ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டு, சிறிய ரசீது எழுதி கொடுத்துள்ளார்.

அதன்பிறகு வீட்டிற்கு சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.

இதையடுத்து ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார்கள்.

அதில், ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.

You may also like

© RajTamil Network – 2024