பார்பிக்யூ ஆசையால் பறிபோன உயிர்கள்… புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி இறந்தார்களா? போலீசார் விசாரணை

பார்பிக்யூ சமைத்துவிட்டு அடுப்புக்கரியை அணைக்காமல் தூங்கியதால் வாலிபர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் பகல் முழுவதும் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு சுற்றுலா இடங்களை ரசித்து பார்த்த அவர்கள், இரவு தங்கும் விடுதிக்கு திரும்பினர். தங்கும் விடுதியின் ஒரு அறையில் நண்பர்களான ஜெயக்கண்ணன், ஆனந்த்பாபுவும், மற்றொரு அறையில் சிவசங்கர், அவரது தம்பி சிவராஜ் ஆகியோரும் தூங்கினர்.

இதில் இரவு பார்பிக்யூ சிக்கன் சமையல் முடித்து விட்டு அந்த அடுப்பினை அணைக்காமல் தங்களது அறையிலேயே குளிருக்காக அப்படியே விட்டு விட்டு உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்தசூழலில் நேற்று காலை ஜெயக்கண்ணன், ஆனந்த்பாபு ஆகியோர் தங்களது அறையில் இருந்து வெகுநேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்களான சிவசங்கரும், சிவராஜுவும் அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு ஒருவர் கட்டிலிலும், மற்றொருவர் தரையிலும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயங்கி கிடந்த 2 வாலிபர்களை பரிசோதனை செய்தனர். அப்போது 2 பேரும் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் தங்கும் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர்.

அப்போது நேற்று இரவு அடுப்பு கரியை அணைக்காமல் அறையிலேயே வைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset