பார்வையற்ற மாற்றுத் திறனாளியிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக அறநிலைய துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பார்வையற்ற மாற்றுத் திறனாளியிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக அறநிலைய துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி/திருப்புவனம்: திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், அறநிலையத் துறை சார்பில் செயல்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான எம்.பாலமுருகன் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு 7-வது ஊதியக் குழு நிலுவைத்தொகை வழங்குவதில் சிக்கல்கள் இருந்தன. அவை தீர்க்கப்பட்டால் அவருக்கு ரூ.10 லட்சம் நிலுவைத்தொகை கிடைக்கும். எனவே, சிக்கல்களைத் தீர்த்து, நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அறநிலையத் துறை ஆணையரிடம் பாலமுருகன் விண்ணப்பித்தார்.

அதன்பேரில், பள்ளியின் பொறுப்பு அலுவலரான, அப்போதைய திருச்செந்தூர் கோயில்இணை ஆணையர் சி.குமரதுரையிடம், பாலமுருகன் தொடர்பான சில ஆவணங்களை அறநிலையத் துறை ஆணையர் கோரினார். பாலமுருகனுக்கு சாதகமாக ஆவணங்களை வழங்க வேண்டுமானால், தனக்கு ரூ.3 லட்சம் தர வேண்டுமென குமரதுரை கேட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021 டிச. 17-ம் தேதி திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் குமரதுரையின் அலுவலகத்துக்கு சென்ற பாலமுருகன் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அதை இணை ஆணையரின் உதவியாளர் பி.சிவானந்த் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான உரையாடல்களை பாலமுருகன் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி எஸ்.பாட்டல் பால்துரை தலைமையிலான போலீஸார்விசாரணை நடத்தி, இணை ஆணையர் சி.குமரதுரை மீது வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய சி.குமரதுரை தற்போது அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மின் ஊழியர் கைது: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதையைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், தனது தென்னந்தோப்பில் தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தி, அங்குள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். இதற்கு மின் வாரிய ஊழியர் (ஃபோர்மேன்) கண்ணன் (58) ரூ.2,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சோமசுந்தரம், சிவகங்கை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

பின்னர், போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயனப் பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை மின் வாரிய அலுவலகத்தில் கண்ணனிடம், சோமசுந்தரம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் கண்ணனை கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வீடியோ; வட்டாட்சியர் சஸ்பெண்ட்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் காரல் மார்க்ஸ்(45). இவர், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இடப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக வட்டாட்சியர் முதல் தவணையாக ரூ.20 ஆயிரம், 2-வது தவணையாக ரூ.30 ஆயிரம் லஞ்சம்வாங்கியது தெரியவந்தது. மேலும், குளம், குட்டைகளில் மண் எடுப்பதற்கு வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, வட்டாட்சியர் காரல் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சாரு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024