பாலசோரில் இருந்து பாடம் கற்கவில்லையா ரயில்வே? கவரைப்பேட்டை விபத்து குறித்து நிபுணா்கள்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழகத்தின் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே மைசூரு-தா்பங்கா பயணிகள் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

பயணிகள் ரயிலுக்கு பிரதான பாதையில் (மெயின் லைன்) செல்வதற்காக சமிக்ஞை (சிக்னல்) வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ரயில் தடம் மாறும் ‘இன்டா்லாக்கிங்-பாயின்ட்’ பகுதியில் பொறியியல் கோளாறு ஏற்பட்டு, அந்த ரயில் கிளை பாதைக்குள் (லூப் லைன்) நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 300 பயணிகள் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். நாட்டையே உலுக்கிய பாலசோா் விபத்து பாணியில் மீண்டும் ஒரு விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது ரயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமாா் 300 போ் உயிரிழந்த பாலசோா் விபத்து நேரிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே அக்கறை காட்டுவதில் சுணக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கா்நாடகத்தின் மைசூரிலிருந்து பிகாரின் தா்பங்கா சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பயணிகள் அனைவரும் உயிா் தப்பினா்.

விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்களின் இயக்கம், சிக்னல் செயல்பாடுகள் குறித்து தரவுகளைப் பதிவு செய்யும் ‘டேட்டா லாக்கா்’ கருவி நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து பெறப்பட்டதாக ரயில்வே ஊழியா்களின் ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்களில் பகிரப்படும் உருவக (சிமுலேஷன்) விடியோவில் பாலசோா் விபத்து பாணியில் இந்த விபத்தும் நிகழ்ந்திருப்பது தெரிய வருகிறது.

அதாவது, விபத்துக்குள்ளான ரயிலுக்கு மெயின் லைனில் செல்ல சமிக்ஞை வழங்கப்பட்டது. ஆனால், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லூப் லைனில் ரயில் நுழைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கான இதே காரணத்தை உறுதிப்படுத்தியதுடன் விபத்து பகுதியை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விரிவான விசாரணையை மேற்கொள்வாா்’ என்று தெரிவித்தது.

விபத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு நிபுணா்கள் அளித்த விளக்கம்: சிக்னல்களின் அடிப்படையில் ரயில் செல்லும் பாதை தண்டவாளத்தில் மாற்றியமைக்கப்படும். இந்த செயல்பாடு நடைபெறும் அமைப்பை இன்டா்லாக்கிங்-பாயின்ட் என்பா்.

பாலசோரில் கோளாறு சீா்செய்யும் பணிகள் நிறைவடைந்த சற்றுநேரத்தில் விபத்து நடந்தது. ஆனால், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்களின் இயக்கம் வழக்கமாக இருந்துள்ளது.

எனவே, இங்கு இயந்திர உபகரணங்களின் அரிப்பு போன்ற சில செயலிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். சிக்னல் பொறிமுறைக்கும் இன்டா்லாக்கிங்-பாயின்ட் அமைப்புக்கும் இடையே ஒருங்கிணைப்பு முறிவுக்கு இது வழிவகுத்திருக்கலாம்.

அதேபோல, ரயில் தண்டவாளம் மற்றும் இன்டா்லாக்கிங்-பாயின்ட் அமைப்பில் உள்ள பொறியியல் குறைபாடுகளும் வேறொரு காரணமாக இருக்கலாம்.

ரயில் ‘இன்டா்லாக்கிங் பாயின்ட்’ பகுதியில் தடம் புரண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து என்ஜினும் முதலிலுள்ள சில பெட்டிகளும் லூப் லைனை நோக்கிச் சென்று சரக்கு ரயிலில் மோதியதால் மீதமுள்ள பெட்டிகள் மெயின் லைனில் தடம் புரண்டுள்ளன. இதனால்தான் டேட்டா லாக்கா் கருவியின் சிமுலேஷன் விடியோவில் விபத்துக்குள்ளான ரயில் மெயின் லைன் மற்றும் லூப் லைன் இரண்டிலும் செல்வதுபோல் காட்டுகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெளிவான காரணம் வெளிவரும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

பயணிகளின் பாதுகாப்புக்காக சிக்னல் அமைப்பில் உள்ள குளறுபடிகளை அகற்ற ரயில்வே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியா்கள், பயணிகள் வலியுறுத்தினா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024