Wednesday, November 6, 2024

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் – மம்தா பானர்ஜி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், முதல் – மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் நேற்று தலைமைச் செயலகம் நோக்கி அனுமதியின்றி பேரணி நடத்தினர். பல்வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. போராடிய மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தில் நீதி கேட்டும், போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் 12 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை குற்றாவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

"பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்தாலோ அல்லது ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்ப தாமதித்தாலோ ராஜ்பவனுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபடுவேன். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மாநிலத்தின் அடிமட்டத்தில் சனிக்கிழமை முதல் திரிணாமுல் காங்கிரஸ் இயக்கம் தொடங்கும்.

பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக போராடி வரும் டாக்டர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் போராடி வரும் டாக்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இறந்த உடல் மீது அரசியல் லாபம் வேண்டும் என்பதால் பாஜக பந்த் நடத்துகின்றனர். இளம்பெண்ணின் மரணத்தை வைத்து சாதாரண மக்களின் உணர்வுகளை பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அவர்கள் மேற்கு வங்காளத்தை இழிவுபடுத்த விரும்புகிறார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024