பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு: பட்டுக்கோட்டை அரசு மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ்

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு: பட்டுக்கோட்டை அரசு மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கூட்டு பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன் (20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 12-ம் தேதி முதலுதவி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பெண் விசாரணையின் போது அளித்த தகவலின் அடிப்படையில் ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என்.அழகேசன், அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தவறிய மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும் அந்தப் பெண்ணுக்கு ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்

You may also like

© RajTamil Network – 2024