பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் – கே.பாலகிருஷ்ணன்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

வெள்ளிக்கிழமை, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு வழியாக பீகாருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில், மாற்று தடத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ரெயில் தடம் புரண்ட சத்தம் கேட்டவுடன் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தன்னார்வலர்கள் திரண்டு ரெயில்வே மற்றும் காவல்துறையுடன் இணைந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத் தோழர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் தொடரும் ரெயில் விபத்துகளின் தொடர்ச்சியாக தற்போது தென்னக ரெயில்வே எல்லைக்குள் நடைபெற்றுள்ள இந்த விபத்து, நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் காட்டுகிறது. ஓரளவு பாதுகாப்பாக உணரப்பட்ட தென்னக ரெயில்வே கட்டமைப்பிலும் விபத்துகள் அதிகரிப்பதை எச்சரிக்கையாக உணர்த்துகிறது. பண்டிகைக் காலத்தில் நடைபெற்றுள்ள இந்த விபத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய பயணத் திட்டம் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரெயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதுடன் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு விழிப்புடன் செயல்பட்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்கும், ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், ரெயில்வே துறையை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024