பிகாரில் பாலங்கள் இடிந்த சம்பவங்கள்: அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்

பிகாரில் பாலங்கள் இடிந்த சம்பவங்கள்: அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம் பிகாரில் பாலங்கள் இடிந்த சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பிகார் அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் உள்ள பாலங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் பாலங்களை முழுமையாக ஆய்வு செய்து, அதன் கட்டமைப்புகள் உறுதியாக உள்ளனவா என்றும் இல்லாவிட்டால், அதனை இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசிடம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிகார் மாநில அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகமும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பிரஜேஷ் சிங் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனுவில், பிகார் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து, அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இருக்கும் பாலங்களின் உறுதித் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

பிகார் போன்ற வெள்ளம் அதிகம் பாதிக்கும் மாநிலங்களில், பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் பெரும் கவலைக்குரியது, பிகாரின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 73 சதவீதம் பகுதி வெள்ள அபாயப் பகுதியாக உள்ளது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!