பிச்சை எடுங்கள்.. சொத்துக்காக கொடுமைப்படுத்திய பிள்ளைகள்! பெற்றோர் எடுத்த முடிவு?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் அருகே வசித்து வந்த மூத்த தம்பதி, தங்களது சொத்துக்காக பிள்ளைகள் கொடுமைப்படுத்தியதால், விபரீத முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

70 வயது ஹசாரிராம் பிஷ்னோய் மற்றும் அவரது 68 வயது மனைவி சாவாலி தேவி ஆகியோர், வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் இறப்பதற்கு முன்பு, வீட்டின் சுவரில் ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். அதில், தங்களை பிள்ளைகள் எவ்வாறெல்லாம் அடித்துத் துன்புறுத்தினார்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்பது குறித்து அவர்களே விவரித்துள்ளனர்.

பல முறை, தங்களை பிள்ளைகளும் மருமகள்களும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி, எங்களுக்கு உணவளிப்பதை நிறுத்தி விட்டதாகவும், ஒரு தட்டை எடுத்துக்கொண்டு பிச்சை எடுங்கள் என்று எங்களை கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் இருவரும்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு பக்கங்களில் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்தை அவர்கள் சுவரில் ஒட்டியிருக்கிறார்கள்.

எங்களது நிலையை யாருக்காவது சொன்னால், உறங்கிக் கொண்டிருக்கும்போதே கொன்றுவிடுவோம் என்று மகன்களும் மகள்களும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த தற்கொலைக் கடிதத்தில், அவர்களது பிள்ளைகள், மருமகள்கள், மகள்கள் மற்றும் சில உறவினர்களின பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எங்கள் பெயர்களில் இருக்கும் அனைத்து சொத்துகளையும் அவர்கள் பிடுங்கிக் கொள்ள முடிவெடுத்து தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், இதற்கு சில உறவினர்களும் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஏற்கனவே சில சொத்துகளை அடித்து மிரட்டி வாங்கிக் கொண்டதாகவும் இருக்கும் சொத்துகளை எங்களது பாதுகாப்புக் கருதி கொடுக்காததால் அவர்கள் எங்களுக்கு உணவு வழங்குவதைக்கூட நிறுத்தி விட்டார்கள் என்றும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அனைவரும் எங்களை கொடுமைப்படுத்துவதாகவும், சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் தட்டை எடுத்து பிச்சை எடுங்கள் என கூறுவதால் மன வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டை பூட்டிவிட்டு, சாவியை ஹசாரிராம் தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறார். தற்கொலைக் கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தங்கள் மீது பெற்றோர் தவறான தகவலை அளித்திருப்பதாக மகன் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024