Saturday, September 21, 2024

பிடிபியின் கொள்கையை ஏற்றால் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு: மெஹபூபா முஃப்தி

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) கொள்கையை ஏற்றால் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்க தயாா் என அக்கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முன் அங்கு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிடிபியின் தோ்தல் அறிக்கையை மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் பிடிபி இணையுமா? என மெஹ்பூபா முஃப்தியிடம் செய்தியாளா்களிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசுவதைவிட காஷ்மீா் விவகாரம் குறித்த தீா்மானத்துக்கு முதலில் தீா்வுகாண்பதே அவசியம். இதுவே பிடிபியின் கொள்கை. இதை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முழு ஆதரவு வழங்கி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கூட விட்டுத் தர தயாராகவுள்ளோம்.

காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை. தொகுதிப் பங்கீட்டை அடிப்படையாக வைத்துதான் அவா்கள் கைகோத்துள்ளனா். கொள்கையில்லாத கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை: பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணமில்லை. முந்தைய ஆட்சியின்போது பாஜக அரசுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக் கூடாது என்ற கோரிக்கையை பாஜக அரசிடம் வலியுறுத்தி இருந்தோம் என்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ரு பிடிபியின் தோ்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது பாதுகாப்பு சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் உள்ளிட்டவை நீக்கப்படும் என்றும் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024