பிரதமரிடம் மூன்று கோரிக்கைகளை வைத்தேன்! முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 45 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள திமுக அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

கண்டெய்னர் லாரியில் தப்பிய கொள்ளையர்கள்! நாமக்கல் போலீஸ் என்கவுன்டர்!

மூன்று கோரிக்கைகள்

“பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில்தான் உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டிய 3 கோரிக்கைகளை அவரிடம் கொடுத்துள்ளோம்.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தியது போன்று, இரண்டாம் கட்ட பணிகளையும் இணைந்து செயல்படுத்துவதுதான் எங்களின் நோக்கம்.

இரண்டாம் கட்டப் பணிகளை தாமதம் செய்யாமல் மேற்கொள்ள 2019ஆம் ஆண்டு கடன் பெற்றும், மாநில அரசு நிதியில் இருந்தும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்பு மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், இதுவரை மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு வழங்கப்படாததால், மெட்ரோ பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால், தாமதமின்றி நிதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, மத்திய அரசின் 60 சதவிகித நிதியும், மாநில அரசின் 40 சதவிகித நிதியுடன் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி ரூ. 2,152 கோடி.

இந்த தொகையில் முதல் தவணை இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததை காரணமாக கூறுகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையைவிட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மொழி திணிக்கப்படாது என்று கூறினாலும், கொள்கையில் திருத்தம் தேவை.

ஆசிரியர்கள் ஊதியம் கொடுக்க முடியாத சூழலும், மாணவர்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் கூறியுள்ளோம்.

மூன்றாவது, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் இந்த சம்பவம் நடைபெறுகிறது. எனவே, உடனடியாக இலங்கை அரசிடம் பேசி தீர்வு காண மத்திய அரசிடம் கோரியுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்