Sunday, October 20, 2024

பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாரதப் பிரதமர் மோடியைப் பற்றியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பற்றியும் தி.மு.க பேச்சாளர் இனியன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. அதாவது தி.மு.க சார்பில் சென்னை பெருங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இனியன் பாரதப் பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் பற்றி தரக்குறைவாக, அவதூறாகப் பேசியதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டம் ஒழுங்கின் சீரழிவையே எடுத்துக்காட்டுகிறது.

தொடர்ந்து தி.மு.க வினர் பொதுவெளியில் எதிர்க்கட்சியினரை பற்றி மரியாதைக்குறைவாக, தரமற்ற முறையில் பேசுவதை மக்கள் கவனிக்கிறார்கள். தி.மு.க வின் அநாகரீகமான அரசியல் தொடர்வது சரியல்ல. தி.மு.க வின் தலைமையானது பேச்சாளர்களுக்கு நல்லது பேச சொல்லிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தீயவற்றை, கெட்டதை பேசக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதப் பிரதமருக்கும், மத்திய நிதியமைச்சருக்கும் அவமரியாதை செய்ய தி.மு.க வினர் அரசியல் கூட்டத்தில், பொது வெளியில் பேசும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்த முயற்சிப்பது தமிழக தி.மு.க அரசுக்குத் தான் எதிராக முடியும். எனவே தமிழக தி.மு.க வே பாரதப் பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024