பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

by rajtamil
Published: Updated: 0 comment 71 views
A+A-
Reset

வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அனுப்பிய புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரும் ஜூன் 1-ந் தேதி 57 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்காக 30-ந் தேதி (நாளை) மாலையில் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 30-ந் தேதி கன்னியாகுமரிக்கு வந்து, விவேகானந்தர் பாறையில் ஜூன் 1-ந் தேதிவரை தியானம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அதுபற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சி தொடர்பான செய்திகளை, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதள சேனல்கள் வெளியிடும். நேரலையிலும் அந்த நிகழ்ச்சிகள் வெளியாகும். அது பிரதமர் மோடிக்கும், அவரது கட்சிக்கும் மிகப் பெரிய விளம்பரத்தை பெற்றுத்தரும்.

தேர்தலில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் போட்டிக்கான சமமான களத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் இந்திய தேர்தல் கமிஷனின் கொள்கையாக உள்ளது. ஆனால் இந்த சமமான களத்தை இது பாதிக்கும். வாக்குப்பதிவு முடியும்வரை பிரதமர் மோடியும், அவரது கட்சியும் தொடர்ந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

தேர்தல் நடத்தை விதியின்படி, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை இது பாதிக்கும். எனவே இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்ய அனைத்து ஊடகங்களுக்கும், இணையதள சேனல்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024