Saturday, September 21, 2024

பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? உத்தவ் தாக்கரே கேள்வி

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

மும்பை

மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்வாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நிறைவு விழாவில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசுகையில், "மணிப்பூர் கடந்த ஒரு ஆண்டாக அமைதிக்காக காத்திருக்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத்தின் நிலைமையை முன்னுரிமையுடன் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசியதாவது:-

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், வடகிழக்கு மாநிலத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு பிறகாவது அவர் மணிப்பூரின் நிலைைம பற்றி கருத்து கூறி இருக்கிறார்.அவர் இவ்வாறு பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் மணிப்பூர் செல்வார்களா?.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு அங்கு என்ன வித்தியாசம் ஏற்பட்டுள்ளது?. அங்கு பல உயிர்கள் பலியாகின்றன. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு?. நான் நாட்டின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் எதிர்காலத்தை பற்றி அல்ல.மேலும், 4 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள மராட்டிய மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி எங்களது கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024