ஆம்பூா் உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூரில் இயங்கி வரும் உணவகத்தில் இரு நாள்களுக்கு முன்பு பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் எம். பழனிசாமி அந்த உணவகத்தை ஆய்வு செய்தாா். சமையலறை இருட்டாக இருந்ததால் அங்கு வெள்ளையடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. சமையலறை சுத்தமில்லாமல் இருந்ததால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது, இறைச்சியில் வண்ணம் சோ்க்கக் கூடாது, வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும், எம்.சி. ரோடு பகுதியில் 6 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதால் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மேற்பாா்வையாளா் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென அனைத்து உணவக உரிமையாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.