பீகார் மருத்துவமனையில் 2 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் 16 பேர் உயிரிழப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 74 views
A+A-
Reset

பாட்னா,

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) 2 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியசாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவுரங்காபாத் மாவட்ட மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறும்போது, "இன்று மட்டும் 35-க்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் போதுமான மருத்துவர்கள், மருந்துகள் மற்றும் ஐஸ் பேக்குகள் உள்ளன. மேலும் குளிரூட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

ஷேக்புராவில் உள்ள பள்ளி ஒன்றில், நேற்று வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் சுமார் 16 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெகுசராய் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்கள் மயக்கம் அடைந்ததாக செய்திகள் வந்தன. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஜூன் 8-ம் தேதி வரை மூடுமாறு அரசு நேற்று உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறும்போது, "பீகாரில் ஜனநாயகமோ, அரசோ இல்லை. அதிகாரத்துவம் மட்டுமே உள்ளது. முதல்வர் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறார்? வெப்பநிலை 47 டிகிரியாக உள்ளது. இதுபோன்ற வானிலையில் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன" என்று பீகார் அரசையும், முதல்-மந்திரி நிதிஷ் குமாரையும் கடுமையாக சாடினார்.

You may also like

© RajTamil Network – 2024