Wednesday, November 6, 2024

புகை மூட்டத்தில் இருந்து விடுபடாத தில்லி: 9 இடங்களில் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

புது தில்லி: தீபாவளிக்குப் பிறகு தொடர்ந்து ஆறாவது நாளாக தலைநகா் தில்லியில் பல பகுதிகளில் புதன்கிழமை காலையில் மெல்லிய புகை மூட்டம் நிலவியது. சில பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் தொடங்கியது. இந்தநிலையில், கடந்த இரண்டு மூன்று நாள்களாக இரவிலும் அதிகாலை வேளையிலும் குளிா் அதிகரித்த வண்ணம் உள்ளது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து நிலவி வரும் புகை மூட்டத்தால் முதியவா்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, புதன்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 358 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது ‘கடுமை’ பிரிவில் வருகிறது.

ஒவ்வொரு மணி நேரத்தின் காற்று தரக் குறியீடு புதுப்பிப்புகளை வழங்கும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின் படி, 38 கண்காணிப்பு நிலையங்களில் 3 இடங்களில் காற்றுத் தரக் குறியீட்டு அளவு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருப்பதாகக் காட்டுகிறது.

இதன்படி, அலிபூர் 372, பவானாவில் 412, துவாரகா செக்டார் 8 இல் 355, முண்ட்கா 419, நஜப்கர் 354, நியூ மோதி பாக் 381, ரோஹினி 401, பஞ்சாபி பாக் 388 மற்றும் ஆர்.கே.புரம் 373 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது. இந்த காற்றின் தர அளவீடுகள் இந்த பகுதிகளில் வசிக்கும்

ஆரோக்கியமான மக்களைப் பாதிக்கின்றன. மேலும், ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை தீவிரமாகப் பாதிக்கின்றன.

கலிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள யமுனை நதியில் மாசு அளவு அதிகமாக இருப்பதால், அதிகயளவிலான நச்சுகள் கலந்த நுரை மிதந்து வருகின்றன.

அந்த தண்ணீரை பயன்படுத்து மக்களுக்கு தோல் வெடிப்பு, சுவாசக் கோளாறுகள், கண் தொற்று மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக் கூடும். மாசு சதவீதம் 10 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க |ரந்தம்பூர் பூங்காவில் 25 புலிகளைக் காணவில்லை!

தீபாவளிக்குப் பிறகு, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களில் காற்றின் தரநிலை அளவு 300-400 புள்ளிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தீபாவளி கொண்டாட்டத்தின் போது காற்று மாசுவை கட்டுப்படுத்த தலைநகரில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எப்படி மீறப்பட்டது என தில்லி அரசுக்கு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாசுவை சமாளிப்பதை உறுதி செய்வதற்கும், நகரில் பட்டாசு தடையை அமல்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், நாளிதழ்களில் பட்டாசு தடை சட்டம் அமல்படுத்தப்படவில்லை என செய்திகள் வரும் நிலையில், பட்டாசு தடையை அமல்படுத்தாதது ஏன் என தில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும்.

மேலும், வரும் ஆண்டுகளில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு எதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கும், தில்லி காவல் ஆணையருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அர்ச்சனா பதக் தவே, இந்த ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு கட்டுப்பாடுகள் முற்றிலும் பின்பற்றப்படவில்லை என்றும், தீபாவளி நாளில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரிக்கும் என்று அறிக்கை இருப்பதாகவும் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024