Monday, September 23, 2024

புதிய கிரிமினல் சட்டம் : முதல் வழக்கு யார் மீது தெரியுமா?

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய கிரிமினல் சட்டங்கள்.. முதல் வழக்கு யார் மீது தெரியுமா?மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல் வழக்கு யார் மீது பதியப்பட்டது என்ற தகவலை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

1858 முதல் 1947 வரை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், 1860- ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தை அமல்படுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்து குடியரசான பிறகும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு, அவையே நடைமுறையில் இருந்தன.

இந்த சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்த மத்திய அரசு, 2020- ஆம் ஆண்டு குற்றவியல் சட்ட சீர்திருத்த குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின்படி உருவாக்கப்பட்ட புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மத்திய அரசு நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த டிசம்பர் மாதமே அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

விளம்பரம்

இந்த குற்றவியல் சட்டங்கள் 3-ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும் புதிதாக 3 சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே அறிவித்தபடி, இன்று முதல் அமலுக்கு வந்தன. பழைய சட்டங்களில் இருந்தவற்றில் சுமார் 80 சதவீதம் புதிய சட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்கவும், கூட்டு சேர்ந்து கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

பயங்கரவாதம், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தவறான திருமண வாக்குறுதியின் கீழ் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்க முடியும் என்ற நிலையில், புதி சட்டப்படி குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 60 அல்லது 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆதினியம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்ற 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற தண்டனை சட்டத்தின் கீழ், டெல்லியில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக தண்ணீர் மற்றும் குட்கா விற்றதாக முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த கடையை அகற்றுமாறு பலமுறை கூறியும், அந்த வியாபாரி ஒத்துழைக்காததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏழை எளியவர்களை துன்புறுத்துவது தான் இச்சட்டத்தின் நோக்கமா ? என்ற விமர்சனங்களை பலர் முன்வைத்தனர்.

விளம்பரம்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அது பொய். முதல் வழக்கு நடைபாதை வியாபாரிக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை. முதல் வழக்கு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நள்ளிரவு 12.10 மணிக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்டது” என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
criminal case
,
law
,
New Criminal Law

You may also like

© RajTamil Network – 2024