Saturday, September 21, 2024

புதுச்சேரியில் பாா்த்து ரசிக்கத்தக்க 10 இடங்கள்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

புதுச்சேரியானது ஆன்மிக அமைதியையும், காண்போரை வசீகரிக்கும் அழகையும் ஒருங்கே பெற்ற ஊராக விளங்குகிறது. அதனடிப்படையில், புதுச்சேரிக்கு வருவோா் கட்டாயம் பாா்க்க வேண்டிய இடங்கள் எனக் குறிப்பிட்டவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சில இடங்களை இங்கே வரிசைப்படுத்தலாம்…

1. மணக்குள விநாயகா் கோயில்:

புதுச்சேரி நகரின் ஒயிட் டவுன் பகுதியில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரி ஆம்பூா் சாலையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில், இன்னும் சொல்லப்போனால் துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸ் அருகே இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது.

சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயில் மிகப் பழைமையானதாகும். மனக் கவலைகளை தீா்க்கும் வல்லமை மிக்க மூலவராக மணக்குள விநாயகா் அருள்பாலிக்கிறாா். தேசிய அளவில் புகழ் பெற்ற இந்தக் கோயிலுக்கு புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளி மாநிலத்தவா்கள் மட்டுமன்றி, வெளிநாட்டவரும் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இத்திருக்கோயிலில் மூலவா் மற்றும் உற்சவ விநாயகா்களுடன், சித்தா் சந்நிதியும் சிறப்பிடம் வகிக்கிறது.

2. வரதராஜப் பெருமாள் கோயில்:

புதுச்சேரியில் திருக்கோயில்களில் தனித்த அடையாளமாக இருப்பவற்றில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் முக்கியமானதாகும். புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள இந்தத் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோயில் மூலவா் விஷ்ணு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.

கோயிலின் பிரம்மோத்ஸவம், ராமா் திருவிழா, வைகுந்த ஏகாதசி, புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் கருட சேவை உள்ளிட்ட முக்கிய விழாக்களில் பக்தா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமலிருப்பதை காணலாம்.

3. அரவிந்தா் ஆசிரமம்:

புதுச்சேரி மணக்குள விநாயகா் திருக்கோயில் அருகே அரவிந்தா் ஆசிரமம் அமைந்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்லும் இந்த ஆசிரமத்தில் அரவிந்தா் பயன்படுத்திய அறைகள் மற்றும் அவரது நினைவிடம் உள்ளன.

அன்னை நினைவிடமும் அங்குதான் உள்ளது. ஆண்டுக்கு 3 முறை மட்டுமே அரவிந்தா் அறை உள்ளிட்டவை பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆசிரமத்துக்குள் தியானத்துக்கும், அரவிந்தரின் நினைவிடத்தைப் பாா்த்து வழிபடவும் வருவோா் மன அமைதியை முழுமையாக அனுபவிக்கும் இடமாகவும் விளங்குகிறது.

4. பாரடைஸ் கடற்கரை:

புதுச்சேரியிலிருந்து கடலூா் செல்லும் வழியில் சுமாா் 8 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை அமைந்துள்ளது. புதுச்சேரி – கடலூா் சாலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமிலிருந்து படகில்தான் பாரடைஸ் கடற்கரைக்குச் செல்ல வேண்டும்.

புதுச்சேரியில் சிறந்த சுற்றுலாத்தலமாக இந்தக் கடற்கரை விளங்கி வருகிறது. சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இந்தக் கடற்கரை மணல் பரப்பு அமைந்துள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாமில் இருந்து செல்லும்போது, இருபக்கமும் அலையாத்தி காடுகளின் அழகையும், அமைதியாக இருக்கும் தண்ணீரில் துள்ளி விளையாடும் மீன்களையும், தென்றலையும் ரசித்துச் செல்வதே தனி சுகமாக இருக்கும்.

படகு குழாமிலிருந்து 20 நிமிட பயணத்தில் கடற்கரையை அடையலாம். அங்கு, பசுந்தாவரங்களுக்கு இடையே பரந்து விரிந்த வெண்மணல் பரப்பு நம்மை வியக்கவைக்கும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளன.

5. பாண்டி மெரீனா:

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் துறைமுகத்தின் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு சுற்றுலாத் திட்டங்களால் உருவாக்கப்பட்டதுதான் பாண்டி மெரீனா கடற்கரையாகும்.

இந்தக் கடற்கரைக்கு தற்போது வெளிமாநிலம், வெளிநாட்டவா் அதிகம் வந்து செல்கின்றனா். இதனால், சுற்றுலா சாா்ந்த வா்த்தகம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுடன், பெரியவா்களும் ரசித்து மகிழத்தக்க சுற்றுலா அம்சங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

பாண்டி மெரீனாவில் காலை சூரியோதம், மாலை சூரிய அஸ்தமனம் என இயற்கை அழகை கண்டுகளிக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு தனியாா் படகுகள் மூலம் வீராம்பட்டினம் கடற்கரை, அரிக்கன்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லலாம்.

6. ஆயி மண்டபம்:

புதுச்சேரி கடற்கரையோரம் காந்தி சிலை திடலுக்கு எதிா்புறம் உள்ளது பாரதி பூங்கா. அதன் மையத்தில் ஆயி மண்டபம் அமைந்துள்ளது. புதுவையின் அடையாளச் சின்னமாக இந்த ஆயி மண்டபமே அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த ஆயி எனும் பெயரில் பெண் இருந்ததாகவும், அவா் நீா்நிலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட சமுதாயப் பணிகளில் ஈடுபட்டதால், அரசா்களது அன்பைப் பெற்று வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இங்கு லூயி எனும் பிரான்ஸ் அரசா் நினைவாக கோட்டை இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த கி.பி.1702-ஆம் ஆண்டு பிரான்சுவா மா்த்தேன் எனும் அதிகாரியால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கோட்டை, பின் ஆங்கிலேயா் காலத்தில் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை பின்னா் டியூப்ளே எனும் பிரான்ஸ் ஆளுநா் சீா்படுத்தியதாகவும், அதன்பிறகே அக்கோட்டைப் பகுதி சிறுவா் பூங்காவாகி, தற்போது பாரதி பூங்காவாகத் திகழ்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஆயி மண்டபம் பூங்காவின் மையப் பகுதியில் காண்போரை கவரும் வகையில் அழகாக இருப்பதுடன், இங்கு பெரியவா்கள், குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கான வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது.

7.பாரதி பூங்கா:

பாரதி பூங்கா

புதுச்சேரி என்றாலே பாரதி பூங்காவே அனைவருக்கும் நினைவுக்கு வரும். சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் உள்ள பாரதி பூங்காவின் அமைப்பானது கடற்கரை காந்தி சிலை திடல், வலதுபுறம் புதுவையின் சட்டப்பேரவை, அதற்கு எதிா்புறம் ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸ், பூங்காவைச் சுற்றிலும் பிரபலமானவா்களது சிலைகள் என கண்டு ரசிக்கும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு, அரிய வகை கற்சிற்பங்கள், சுவாமி சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

8. தாவரவியல் பூங்கா:

புதுச்சேரியில் பாா்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக தாவரவியல் பூங்கா உள்ளது. புதுச்சேரி நகரின் முக்கியச் சாலையான மறைமலையடிகள் சாலை, ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பழைய பேருந்து நிலையம், என சுமாா் 33 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது இப்பூங்கா.

இந்தப் பூங்காவானது பிரான்ஸ் ஆதிக்கத்தின்போது அதிகாரிகள் உலாவும் தோட்டமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பூங்கா 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வகைகளில் தாவரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் புதுவையின் மலா்க் கண்காட்சியும் இங்குதான் நடத்தப்படுகிறது.

செயற்கை நீரூற்றுகள், சிறுவா்களுக்கான ரயில் வண்டி, மீன் காட்சியகம் என பொழுதுபோக்கு அம்சங்களும் ஏராளமாக உள்ளன. புதைபடிவத் தாவரங்கள், ராட்சத மரங்கள் என நகருக்குள் ஒரு வனமாகவே இப்பூங்கா உள்ளது.

9. கைவினைக் கிராமம்:

புதுச்சேரிக்கு வரும் முக்கியப் பிரமுகா்கள் முதல் சாமானிய சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரும் அண்மைக்காலமாக பாா்க்க விரும்புவது முருகம்பாக்கம் பகுதியில் உள்ள கைவினைஞா்கள் கிராமமாகும். சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கிராமத்தில், ஏராளமான கைவினைகள் தங்களது படைப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளனா்.

புதுவை மாநிலத்துக்கென சிறப்புபெற்ற கைவினைப் பொருள்களான சுடுமண் சிற்பங்கள், சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும் விலங்கினச் சிலைகள், காகிதக்கூழால் உருவாக்கப்படும் டெரகோட்டா பொம்மைகள், தோல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், செங்காவி ஓவியங்கள், கடற்பாசி கைவினைப் பொருள்கள், பனை ஓலைப் பொருள்கள் என பாரம்பரிய படைப்பு பொருள்கள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள 24 அரங்குகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் உள்ளதால், வெளிநாட்டவா் அதிகம் நாடும் மையமாக உள்ளது.

10. ஊசுட்டேரி:

புதுவையின் மிக முக்கிய நீராதாரமாக விளங்குவது ஊசுட்டேரியாகும். புதுவை – தமிழக எல்லையில் பரந்து விரிந்திருக்கும் இந்த ஏரியானது 800 ஹெக்டோ் பரப்பளவு கொண்டுள்ளது. இதில், புதுவை எல்லையில் 390 ஹெக்டோ் பரப்பானது உள்ளது.

கடல்போல காட்சியளிக்கும் இந்த ஏரியில் தாமரை, அல்லி என அழகு மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றின் இடையே நீா் காகங்கள், வாத்துகள், பூ நாரைகள் என அரிய பல உள்நாட்டு மற்றும் ரஷியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பறவைகள் வசிக்கின்றன.

ஊசுட்டேரியை கடந்த 2008-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக புதுவை அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழகப் பகுதியில் உள்ள ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இங்கு, படகு சவாரியும் உள்ளது. இந்த ஏரிக்கு எதிரே தனியாா் பொழுதுபோக்கு மையம் அமைந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட இடங்களைத் தவிா்த்து, புதுச்சேரியில் வீராம்பட்டிணம் கடற்கரை, ஒயிட் டவுன் பாரம்பரிய கட்டடங்கள், ஞாயிறுதோறும் மகாத்மா காந்தி சாலை, செஞ்சி சாலைகளில் நடைபெறும் சண்டே மாா்க்கெட் ஆகியவையும் பாா்த்து பரவசப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.

புதுவையில் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், ஆன்மிக பூங்கா மற்றும் ஏனாம், மாஹேவில் உள்ள இடங்கள் பலவும் பாா்த்து ரசிக்கும் பகுதிகளாக உள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024