Saturday, September 21, 2024

புதுவித மோசடி… இந்தியா போஸ்ட் பெயரில் இப்படி எஸ்.எம்.எஸ். வந்தால் நம்பாதீங்க

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

புதுடெல்லி:

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோர், அந்தந்த தளங்களில் தங்கள் முகவரியை பதிவு செய்து வைப்பது வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கு வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவோ, யு.பி.ஐ. செயலி மூலமாகவோ ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள். இந்த வாடிக்கையாளர்களை குறிவைக்கும் மோசடி கும்பல், தரவுகளை பெற்று நிதி மோசடியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வலை வீசலாம். அதனால்தான், வங்கிகள் அனுப்பும் ஓ.டி.பி. போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வகையில் சமீபத்தில் இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில், குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும் இ-மெயில் முகவரிக்கும் மோசடிக் கும்பல் எஸ்.எம்.எஸ். அனுப்பி வலைவீசுகிறது.

இந்தியா போஸ்ட் பெயரில் வரும் அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது. டெலிவரி செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தோம். ஆனால், முகவரி முழுமையாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க, உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யுங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்தால் இந்தியா போஸ்ட் இணையதளம் போன்ற ஒரு இணையதளம் ஓபன் ஆகிறது. அதில் முகவரியை அப்டேட் செய்யும்படி கேட்கிறது.

எந்த பொருளும் ஆர்டர் செய்யாத நபர்களுக்கும் இதுபோன்ற தகவல் வந்துள்ளது. இதுபற்றி ஆராய்ந்தபோது இது போலியான தகவல் என்பதும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, நிதிப் பாதிப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.

இது போலியானது என பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு, கடந்த மாதம் உறுதி செய்ததுடன், மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவித்தது. அதுபோன்ற எஸ்.எம்.எஸ்.-ஐ இந்தியா போஸ்ட் அனுப்பவில்லை என்றும், மோசடி கும்பல் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

இந்த மோசடி கும்பல் அனுப்பும் லிங்க், செல்போனில் மட்டுமே ஓபன் ஆகும், டெஸ்க்டாப்பில் ஓபன் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டு சாதனங்களிலும் அந்த லிங்க் ஓபன் ஆகிறதா? என்பதை சரிபார்த்து, மோசடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் மோசடி கும்பல் அனுப்பும் தகவலில் மொழி மற்றும் இலக்கண பிழை ஏதாவது இருக்கிறதா? என தேட வேண்டும். ஏனென்றால், ஒரிஜினல் போன்று இருப்பதற்காக சில எழுத்துகளை மட்டும் மாற்றி வைப்பது மோசடி கும்பலின் வழக்கம். இந்த அறிகுறியை வைத்தே அது போலியானது என அறிந்துகொள்ளலாம்.

செல்போனுக்கு வந்த தகவலில் உள்ள லிங்க் மற்றும் ஒரிஜினல் இணையதளத்தின் லிங்க் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். நமக்கு வந்தது போலியான லிங்க் என தெரியவந்தால், உடனடியாக செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டு, வங்கிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அத்துடன் காவல்துறையில் புகார் பதிவு செய்யவேண்டும்.

செய்திகளை எக்ஸ் தளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள: https://x.com/dinathanthi

You may also like

© RajTamil Network – 2024