புனித சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட மூலவர்கள்… புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலய சிறப்புகள்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

நேபாளத்தின் சாளக்கிராம கல்லில் செய்யப்பட்ட கோதண்டராமர் வீற்றிருக்கும் கோவில் முக்தியை வழங்குவதாக நம்பப்படுகிறது.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணர் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். மூலவர்களான ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் சுக்ரீவர் சிலைகள் சாளக்கிராமக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், புனிதமான சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட அனைத்து மூலவர்களையும் கொண்ட ஒரே ராமர் கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சாளக்கிராமம் என்பது நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.

நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் சம்பந்தியானார்கள். அப்போது, நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு ஏராளமான தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த பட்டாடைகளை சீர் வரிசையாக வழங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய சாளக்கிராமக் கல்லையும் வழங்கினார்.

காலங்கள் உருண்டோடின. மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜா தஞ்சையை ஆண்டபோது, சீர்வரிசையாக வந்திருந்த சாளக்கிராமக் கல்லை கண்டார். அதை பார்த்ததும் மெய்சிலிர்த்து போனார். காரணம் பொதுவாகவே சாளக்கிராமக் கல், உள்ளங்கை அளவு அல்லது அதைவிட சற்று பெரிதாக இருக்கும். ஆனால் தஞ்சை மன்னருக்கு வழங்கப்பட்ட சாளக்கிராமக் கல் அளவில் பெரியது. அதனைக் கொண்டு அழகிய கோதண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகளை வடிவமைக்க உத்தரவிட்டார். மேலும், ராஜ கோபுரத்துடன் கூடிய கோவிலையும் கட்டி எழுப்பினார்.

நேபாளத்தில் உள்ள முக்திநாத், சிறப்பான முக்தி தலமாக விளங்குகிறது. அதேபோல் நோபாளத்தின் சாளக்கிராம கல்லில் செய்யப்பட்ட இந்த கோதண்டராமர் வீற்றிருக்கும் கோவிலும் முக்தியை வழங்குவதாக சொல்கிறார்கள். இத்தல கோதண்டராமரை துளசி மாலை சூட்டி வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிறார்கள். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக ரீதியான கஷ்டங்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024