புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் பெற்றோருக்கு 5-ந் தேதி வரை போலீஸ் காவல்

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

புனே,

மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த மாதம் 19-ந் தேதி அதிகாலை மதுபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 அப்பாவி ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரத்த பரிசோதனையில் சிறுவன் மதுகுடிக்கவில்லை என கூறப்பட்டதும் சந்தேகத்தை கிளப்பியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி மோசடி நடந்தது அம்பலமானது. சிறுவனின் தந்தை கூறியதன் பேரில் ரத்த மாதிரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக சசூன் ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவனுக்கு பதிலாக அவனது தாய் சிவானி பரிசோதனைக்கு ரத்த மாதிரியை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து புனே கார் விபத்து வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், தாய் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனின் தாயை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஏற்கனவே சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள சிறுவனின் தந்தையையும் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று விசாரணை முடிந்து போலீசார் சிறுவனின் தந்தை, தாயை புனே விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு 2 பேரையும் வருகிற 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்டது.

புனே கார் விபத்து வழக்கில் சிறுவனின் தந்தை, தாய் தவிர அவனது தாத்தா சுரேந்திர அகர்வாலும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் சிறுவனுக்கு பதிலாக வீட்டின் கார் டிரைவரை மிரட்டி போலீசில் ஆஜராக வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024