Saturday, September 21, 2024

புரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறைகளில் இருந்தது என்ன? நேரில் கண்ட நீதிபதி பேட்டி!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறைகளில் இருந்தது என்ன? நேரில் கண்ட நீதிபதி பேட்டி!புரி ஜெகந்நாதர் கோவிலின் கருவூல அறைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு என்ன இருந்தது என்பது குறித்து முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் பேட்டியளித்துள்ளார்.ஜெகந்நாதர் கோவிலின் கருவூல அறைகளில் இருந்தப் பொருள்களைக் கணக்கிடுவதற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லக் கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகள்

ஒடிசா மாநிலத்திலுள்ள 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலில் 46 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருவூல அறைகளுக்குள் என்னென்னதான் இருந்தன?

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும் பிரச்சினையாக எழுப்பப்பட்டு ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் தோல்வியுறக் காரணமானதாகக் கருதப்பட்டது இந்தக் கருவூல பிரச்சினை.

மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 14) இந்தக் கோவில் கருவூலங்கள் திறக்கப்பட்டன.

பெரும் விவாதத்துக்குக் காரணமான இந்தக் கருவூல அறைகளுக்குள் என்ன இருந்தன?

கருவூல அறைகளைத் திறக்கவும் கணக்கெடுக்கவும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத், கருவூல அறைகளில் நேரில் கண்டவற்றை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கோயிலின் அடித்தளத்தில் உள்ள கருவூல அறைக்குள் சென்று, மாநில அரசின் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அறையை பழுதுபார்க்கவும், விலைமதிப்புமிக்க தங்க, வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பல மதிப்புமிக்க பொருள்களை முழுமையாக பட்டியலிடவும் இந்த கருவூல அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஒடிசா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத், ஸ்ரீஜெகந்நாதா் கோயில் நிா்வாகத்தின் தலைமை நிா்வாகி அரவிந்தபதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளா் டி.பி. கதநாயக் உள்பட 11 போ் அறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த அறைகளைச் சுற்றி, நிறைய பாம்புக் கூட்டங்கள் காவல் இருக்கின்றன என்பது உள்பட, காலங்காலமாக மக்களிடையே ஏராளமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.

ரத்ன பந்தர் என்று கூறப்படும் கருவூல அறையின் உள்ளே சென்று வந்தபின் அதன் மர்மங்கள் குறித்து முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் அளித்துள்ள பேட்டியில், ”அனைவரும் கூறுவது போலல்லாமல், பஹாரா பந்தர் (வெளிப்புற அறை) மற்றும் பிதாரா பந்தர் (உள்புற அறை) இரண்டுமே சாதாரண அறைகள் போன்றே இருந்தன. இரண்டு அறைகளிலும் இரும்புக் கம்பிகள் பொருத்தியக் கதவுகள் இருந்தன. அதன் வழியே ,உள்ளே இருக்கும் அறையின் அமைப்புகளை எளிதாகக் காண முடியும்.

பஹாரா பந்தர் தினசரி திறக்கப்படுவதால் நன்கு காற்றோட்டமாக இருந்தது. அறைகள் விரைவில் பழுதுபார்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில் பாம்புகள் அறையைப் பாதுகாக்கின்றன என்ற வதந்திகளுக்கும் இனி வேலையில்லை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “நாங்கள் கோவில் சார்பில் குறித்துக் கொடுக்கப்பட்ட நல்ல நேரப்படி மதியம் 1.28 மணிக்கு பஹாரா பந்தருக்குள் நுழைந்தோம். பூட்டுகளைத் திறந்ததும் அங்குள்ள அலமாரிகள் மற்றும் பெட்டிகளிலுள்ள ஆபரணங்களின் நிலையை சரிபார்த்தோம். அங்கிருந்த விலைமதிப்புமிக்க பொருள்களை வெளியே எடுத்து தற்காலிகமாக அதற்கென வடிவமைக்கப்பட்ட தேக்குமரப் பெட்டிகளில் அவற்றை பத்திரப்படுத்தினோம்.

ஒவ்வொரு ஆபரணம் மற்றும் பொருள்களுக்கும் தனித்தனியே வரிசை எண்கள் குறிப்பிட்டு அதன்படி தேக்குமரப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். தங்க நகைகளின் உடைந்த பாகங்கள் ஏதேனும் கீழே விழுந்திருக்கலாம் என்பதால் அங்கிருந்த மணல் தூசுகளைக் கூட தனியே பைகளில் எடுத்துப் பெட்டியில் வைத்துள்ளோம். உள்ளிருக்கும் அலமாரிகள் மற்றும் பெட்டிகளை வெளியே கொண்டு வரவில்லை.

மொத்த நிகழ்வும் 2 விடியோ காமிராக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

பஹாரா பந்தரிலுள்ள மற்ற பொருள்கள் குறித்து கேட்டபோது “பஹாரா பந்தரில் கடவுளுக்கு சாற்றப்படும் பல்வேறு ஆடைகள் இருந்தன. 15 முதல் 20 பூட்டுகள் கொண்ட ஒரு கனமான இரும்புப் பெட்டி இருந்தது. பல காலமாகத் திறக்கப்படாமல் இருந்த அந்தப் பெட்டி ஒரே சாவியால் திறக்கும் வகையில் இருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது நூறு ஆண்டுகள் பழமையான ஆடைகளும், சந்துவா (வெல்வெட் துணியால் செய்யப்பட்ட கைவினை வடிவமைப்பு) துணிகளும் இருந்தன. அவற்றின் தரம் மற்றும் நிறம் சற்றும் மங்காமல் இருந்தன. அவற்றையும் தேக்குமரப் பெட்டியில் பத்திரப்படுத்தியுள்ளோம்.

இந்த ஒரு அறையின் பொருள்களை இடம்மாற்றவே 3 மணி நேரங்கள் ஆனது” என்றார்.

பிதாரா பந்தர் (உள் அறை) திறக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ”பிதாரா பந்தரில் மூன்று பழைய இரும்புப் பூட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில், ஒன்று சீல் வைக்கப்பட்டிருந்தது. 3 பூட்டுகளும், 2 சாவிகளும் துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தன. அரசு வழிகாட்டுதலின்படி அறையின் சாவிகள் கருவூலத்திலிருந்து சீல் செய்யப்பட்ட கவரில் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதிலிருந்த 2 சாவிகளும் பூட்டுகளைத் திறக்காததால் அரசு வழிகாட்டுதலின்படி பூட்டுகளை உடைத்து அறையைத் திறந்தோம். அகல் விளக்குகளை மட்டுமே அறைக்குள் எடுத்துச் சென்று, அங்கிருந்த சிறு அளவிலான இறைத் திருமேனிகளை வழிபட்டோம்.

பிதாரா பந்தரின் சுவர்களில் இரும்பு மற்றும் மர அலமாரிகளும், மரப் பெட்டிகளும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. பல பெட்டிகள் தரையில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் என்ன இருந்தது என்பதை நாங்கள் பார்க்கவில்லை. தரையில் கற்கள் உடைந்த நிலையிலும், இரும்புப் பொருள்களும் கிடந்தன. அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தேக்கு மரப் பெட்டிகளில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 நிமிடங்கள் அந்த அறையில் இருந்தோம். அதன் அமைப்பு மற்றும் பொருள்கள் முழுக்க அனைத்தும் விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024