லக்னோ,
யோகி ஆதித்யநாத் அரசு "புல்டோசர் அரசியலை" செய்வதை விட்டுவிட்டு, வன விலங்குகள் மனித வாழ்விடத்திற்குள் நுழைந்து மக்களைத் தாக்குவதைச் சமாளிக்க ஒரு உத்தியை உருவாக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வனவிலங்குகள் குழந்தைகள், மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கி உள்ளது. இதனைத் தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், தொழிலாளர்கள், எளிய மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு ஊருக்குள் வரும் வன விலங்குகளைத் தடுப்பதற்காக அரசு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும்.
அதேபோல் மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நோயாளியை அழைத்துச்செல்லும் வழியில், நோயாளியின் மனைவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயற்சி செய்தது ஒரு அவமானகரமான விஷயம். அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டார். அந்த ஓட்டுநர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப் பிரதேச அரசும், சமாஜ்வாதி கட்சியும் புல்டோசர் அரசியலை சுப்ரீம் கோர்டிடம் விட்டுவிட வேண்டும். அங்கு தான் இதற்கு ஒரு முழுமையான நீதி கிடைக்கும்" என்று அதில் மாயாவதி தெரிவித்துள்ளார்.