புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 85 கன அடி உபரி நீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டது. இதனால் அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகளும், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால் குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆக.31 -இல் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதையும் படிக்க |சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து!

தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அக். 23-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக வியாழக்கிழமை(அக்.24) மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கன மழை பெய்தது. 15 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 150 கன அடி நீர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மாலையில் நீர்வரத்து 87 கன அடியாக சரிந்தது. இருப்பினும், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இதனால், அணைப்பாசன ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை…

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மொத்த கொள்ளளவான 67.25 அடி ஆகும். அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது இதனால், வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி உத்தரவின் பேரில், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024