Monday, September 30, 2024

பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் நீட்டிப்பு: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ரூ.4.80 கோடி ஒதுக்கீடு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் நீட்டிப்பு: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ரூ.4.80 கோடி ஒதுக்கீடு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தித்தை 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி – பரந்தூர் வரை நீட்டிப்பது, 5-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, தமிழக அரசு ரூ.4.80 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது.

இதில் 3-வது வழித்தடம் 45.4 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலும், 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. தொலைவுக்கு கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலும், 5-வது வழித்தடம் 44.6 கி.மீ தொலைவுக்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை 43.63 கி.மீ. தொலைவுக்கு பரந்தூர் வரை நீட்டிக்கவும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை 16 கி.மீ. நீட்டிக்கவும் திட்டமிட்டு, சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த 2 வழித்தடங்களுக்கான விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க ரூ.4.80 கோடிநிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – பரந்தூர் வரை நீடிக்கவும், கோயம்பேடு – ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் வடிமைப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்கள், பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

© RajTamil Network – 2024